பாண்டூரில் எதிர்ப்பு கும்பலை ஒடுக்கி பாலாற்றில் குடிநீர் கிணறு அமைப்பு
நெரும்பூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த கிளாப்பாக்கம் ஊராட்சி, பெரிய காலனியில், ஆதிதிராவிடர் வசிக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையும், தரமின்றியும் உள்ளது.இப்பகுதி குடிநீர் தேவையை கருதி, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகம், அப்பகுதியை ஒட்டியுள்ள பாண்டூர் ஊராட்சி பாலாற்றுப் படுகையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில்ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்தது.பாண்டூர் தி.மு.க., கிளை செயலர் கிருஷ்ணசாமிக்கும், கிளாப்பாக்கம் ஊராட்சித் தலைவரான அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராசுக்குட்டிக்கும், தேர்தல் பகை இருப்பதாக கூறப்படுகிறது.கிருஷ்ணசாமியின் துாண்டுதலால், பாண்டூர்ஆதிதிராவிடர் குடும்பத்தினர் சிலர், தங்கள் பகுதி பாலாற்றிலிருந்து கிளாப்பாக்கத்திற்கு குடிநீர் வழங்க முடியாது என எதிர்த்தனர். கிணறு அமைக்க விடாமல், தொடர்ந்து தடுத்தனர்.இந்த எதிர்ப்பு கும்பலுடன் பேச்சு நடத்தியும், கிணறு அமைக்கும் பணி முடங்கியது. இதையடுத்து, கிளாப்பாக்கம் ஊராட்சித் தலைவர் ராசுக்குட்டி, கிணறு அமைக்க உயர் நீதிமன்ற உத்தரவு பெற்றார். நவ., 20ம் தேதி, ஒப்பந்ததாரர் 20 அடி ஆழம் வரை குழி தோண்டி, பிளாஸ்டிக்குழாய் பொருத்திய நிலையில், பாண்டூரைச் சேர்ந்த 30 பெண்கள் அப்பணியை தடுத்து, கிணற்றில் மண்ணை நிரப்பி மூடினர்.இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய சூழலில் நேற்று, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, பாஸ்கரன், போலீஸ் டி.எஸ்.பி.,ரவி அபிராம் ஆகியோர் அங்கு முகாமிட்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதே பெண்கள் மீண்டும் முற்றுகையிட்டு, கிணறு அமைக்கும் பணியை தடுக்க முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து, வேறிடத்திற்கு கொண்டு சென்றனர். இவர்களில் பலர் தப்பிஓடினர். அதைத்தொடர்ந்து, ஆற்றில் இரண்டு கிணறுகள் தோண்டி, கிளாப்பாக்கத்திற்கு நிலத்தடி குழாய் புதைக்கப்பட்டது.