200 அடி கல்குவாரி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி
செய்யூர்:பெரியவெண்மணி கிராமத்தில், தனியார் கல்குவாரியில் இருந்து பாறை கற்கள் ஏற்றிச் சென்ற லாரி, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், வடமாநிலத்தைச் சேர்ந்த, லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலியானார். ஒடிசா மாநிலம், ரூர்கேலா பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் லுகான், 51. இவர், கடந்த 10 மாதங்களாக செய்யூர் அடுத்த பெரியவெண்மணி கிராமத்தில் இயங்கும் குளோபல் மைன்ஸ் எனும் கல்குவாரியில், லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 2:00 மணியளவில், குவாரியில் இருந்து லாரியில் பாறை கற்கள் ஏற்றிக்கொண்டு, கிரஷருக்குகிளம்பினார். குவாரி பள்ளத்திலிருந்து லாரி மேலே சென்ற போது, திடீர் மண் சரிவு ஏற்பட்டு, 200 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியின் மீது பாறைகள் விழுந்து, ஓட்டுநர் டேவிட் லுகான் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், பாறைகளுக்கு இடையில் சிக்கிய டேவிட் லுகான் உடலை,'கிரேன்' இயந்திரம் வாயிலாக மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.