பேருந்துக்கு முத்தமிட்ட ஓட்டுநர் பணி நிறைவு விழாவில் நெகிழ்ச்சி
மதுராந்தகம், மதுராந்தகம் போக்குவரத்து கழக பணிமனையில், பணி நிறைவு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுதது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த காவாத்துார் கிராமத்தைச் சேர்த்தவர் பரமசிவம், 60. மதுராந்தகம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், 30 ஆண்டுகளாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மதுராந்தகத்திலிருந்து கொடூர் செல்லும், தடம் எண் '100' பேருந்தை ஓட்டி வந்தார். வயது முதிர்வு காரணமாக, அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில் வருத்தத்துடன் காணப்பட்ட பரமசிவம், கடைசியாக ஒரு முறை பேருந்தை ஓட்ட வேண்டுமெனக் கூறி, பேருந்தை முத்தமிட்டும், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தும், பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுதார். பின், அவர் பேருந்தை ஓட்டிப் பார்த்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.