புழுதி பறக்கும் மோசமான சாலை வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு
மறைமலைநகர், :காயரம்பேடு -- மறைமலைநகர் சாலை, 6 கி.மீ., துாரம் உடையது.இந்த சாலையை கடம்பூர், கலிவந்தபட்டு, கருநிலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.காயரம்பேடு மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராம மக்கள் தினமும், மறைமலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் பணிக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில் கூடலுார் -- கலிவந்தபட்டு இடையே 2 கி.மீ., துாரம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், புழுதி அதிக அளவில் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த தார்ச்சாலை பழுதடைந்து, மண் சாலையாக மாறி உள்ளது. புதிதாக இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர். ஜல்லிகற்கள் பெயர்ந்து, வாகனங்களை இயக்க சவாலாக உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.