கூடுவாஞ்சேரியில் ராட்சத பேனர் காவல் நிலையம் அருகில் அத்துமீறல்
கூடுவாஞ்சேரி:அனுமதி பெறாமல், கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகில் ராட்சத பேனர் வைக்கும் பணி நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகில் ஜி.எஸ்.டி., சாலையில், தனியாருக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் மாடியில், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல், ராட்சத விளம்பர பேனர் வைக்க, இரும்பு சட்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தற்போது, மழைக்காலம் தொடங்கி உள்ளது. மழை மற்றும் புயல் காரணமாக, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து, அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன.இந்நிலையில், பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் விளம்பர பேனர்கள் வைக்க, மாவட்ட நிர்வாகமும், நீதிமன்றமும் தடை விதித்து உள்ளன.ஆனால், இந்த உத்தரவை மீறி அரசியல் கட்சியினர், தங்கள் கட்சி தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளுக்கு பேனர் வைக்கின்றனர். தனி நபர்களும், தங்கள் இல்லங்களில் நடைபெறும் விசேஷங்கள் மற்றும் விழாக்களுக்கு, சாலைகளில் அபாயகரமாக பேனர்கள் வைக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.அந்த வகையில் தற்போது, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அருகில், அபாயகரமான முறையில், ராட்சத விளம்பர பேனர் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், இந்த வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்வர். அதன் அருகில் உள்ள கட்டடத்தின் மேல் அமைக்கப்படும் இந்த விளம்பர பேனர், மழை மற்றும் காற்றால் சரிந்து விழுந்து, விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அனுமதி பெறாமல் அத்துமீறி விளம்பர பேனர் வைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, மாவட்ட நிர்வாகம் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பேனர்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.