மேலும் செய்திகள்
சுற்றுலா பயணியர் வருகை; 'களை' கட்டியது வால்பாறை
29-Sep-2025
மாமல்லபுரம்:இங்கிலாந்து சுற்றுலா பயணியர், ஆட்டோவில் சாகச சுற்றுலா சென்று, தமிழக சுற்றுலா பகுதிகளை ரசித்து வருகின்றனர். தமிழக பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், பழங்கால கோவில்கள், கலையழகு மிளிரும் ஆன்மிக இடங்கள் உள்ளிட்டவை, சர்வதேச பயணியரை கவர்கின்றன. இப்பயணியர் தங்களது நாட்டிலிருந்து விமானம், கப்பல் மூலமாக இந்தியா வந்து பேருந்து, கார் ஆகிய வாகனங்களில் சுற்றுலா பகுதிகளுக்குச் செல்வர். தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணியர் சென்னையிலும், பிற சுற்றுலா இடங்களிலும், பிரத்யேக ஆட்டோவில் சாகச சுற்றுலா செல்லவும் ஆர்வம் காட்டுகின்றனர். சென்னையைச் சேர்ந்த சில தனியார் நிறுவனங்கள், 'சாகச சுற்றுலா' என்ற பெயரில், இப்பயணியருக்காக ஆட்டோ வாகன போக்குவரத்தை நடத்துகின்றன. இந்த ஆட்டோவில், வழக்கமான மஞ்சள் நிறத்தை தவிர்த்து, வெண்மை நிறம் தீட்டப்பட்டு, பல வகை ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்டோ சாகச பயணத்தை விரும்பும் சர்வதேச பயணியர், சுற்றுலா செல்லும் நாட்களுக்கேற்ப, 'ஆன்லைனில்' கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்வர். அதன் பின் சென்னை வரும் அவர்கள், பயண ஆட்டோவை பெறுவர். அந்த வகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆறு பயணியர், கடந்த 4ம் தேதி சென்னை வந்தனர். இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தேசியக்கொடிகள் வரையப்பட்ட இரண்டு ஆட்டோக்களில், ஆட்டோவிற்கு மூன்று பேர் என பயணம் செய்து, இரண்டு நாட்கள் சென்னை பகுதிகளை பார்வையிட்டனர். நேற்று முன்தினம் மாமல்லபுரம் வந்த இவர்கள், இங்குள்ள பல்லவ சிற்பங்களை கண்டு ரசித்தனர். இவர்கள் பிரத்யேக ஆட்டோ வாகனத்தில் பயணம் செய்ததை, பிற பயணியர் வியந்து பார்த்தனர். சாகச ஆட்டோ பயணம் குறித்து, இங்கிலாந்து பயணியர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சீசனில், ஆட்டோ வாகன சாகச பயணம் நடத்தப்படுவதை அறிந்து, முன்பதிவு செய்து வருகிறோம். பேருந்து, கார் போன்ற வாகனங்களை விட, ஆட்டோ பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை விரும்பும் இடத்தில் நிறுத்தி, அப்பகுதி மக்களின் வாழ்வியல், கலாசாரம் குறித்து அறியலாம். சாகச பயணமாகவும் உள்ளது. நாங்களே மாறி மாறி ஆட்டோவை ஓட்டுகிறோம். புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ஏற்காடு, திருவண்ணாமலை, வேலுார் என சென்று, வரும் 10ல் மீண்டும் சென்னையை அடைவோம். இவ்வாறு கூறினர்.
29-Sep-2025