உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பகிங்ஹாம் கால்வாய் அருகே கொட்டப்படும் ஹோட்டல் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

பகிங்ஹாம் கால்வாய் அருகே கொட்டப்படும் ஹோட்டல் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

திருப்போரூர்:கேளம்பாக்கம்- - கோவளம், திருப்போரூர் - நெம்மேலி சாலை இடையே உள்ள பகிங்ஹாம் கால்வாய் அருகே கொட்டப்படும் ஹோட்டல் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்போரூர் ஒன்றியத்தில் பகிங்ஹாம் கால்வாய் இடையே, கேளம்பாக்கம் -- கோவளம் சாலை, திருப்போரூர் - நெம்மேலி சாலை ஆகியவை உள்ளன.ஏரியிலிருந்து வெளியேறும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. இங்கு இயற்கையாகவே நண்டு, இறால், கிளிஞ்சல்கள் வளர்கின்றன. இப்பகுதியிலுள்ள மீனவர்கள், பகிங்ஹாம் கால்வாயில் மீன் பிடித்து, தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர். இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலைகளில், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கடற்கரை 'ரிசார்ட்'டுகள் அதிகம் உள்ளன.மேலும், பல்வேறு நடுத்தர ஹோட்டல்களும் உள்ளன.இதுபோன்ற ஹோட்டல்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகள், நள்ளிரவு நேரங்களில் லோடு வேன் வாயிலாக கொண்டு வரப்பட்டு, மேற்கண்ட பகுதிகளின் பகிங்ஹாம் கால்வாய் அருகே கொட்டப்படுகின்றன.இவை காற்றில் பறந்து, நீர்நிலைகளில் சிதறிக் கிடக்கின்றன. மேலும், இதில் உள்ள உணவு கழிவுகளை உண்பதற்காக மாடுகளும், பன்றிகளும் குவிந்து கழிவுகளை கிளறுவதால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.குப்பை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், அவற்றை உண்ணும் கால்நடைகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே, பகிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் ஹோட்டல் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை