உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

 கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

திருப்போரூர்: கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருப்போரூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு நீலக்கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா, விடுதிகள், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், வங்கி உள்ளிட்டவை உள்ளன. மேலும், கோவளம் அருகே முட்டுக்காடு படகு குழாம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன. இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். அவசர தேவையின் போது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கென சிறுசேரி, திருப்போரூர், மாமல்லபுரத்திலிருந்து வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டிய சூழல் இருந்தது. இதற்கு தீர்வு காண, கோவளத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை கடந்த 2024 ஜூன் மாதம் வெளியிட்டார். இதற்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், கோவளம் நுாலகம் வளாகத்தில் தற்காலிக கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நிலைய அலுவலர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆனால், போதிய இடவசதி இல்லாமல் அனைவருமே சிரமப்படுகின்றனர். தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி எடுப்பதற்கான கட்டட வசதியும் இல்லை. எனவே, கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி