பழுதான டிரான்ஸ்பார்மரை சீரமைக்காததால் நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிப்பு
சித்தாமூர்: பழுதான 'டிரான்ஸ்பார்மர்' 25 நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், நெல் பயிருக்கு நீர் பாய்ச்ச முடியாமல், கல்பட்டு கிராம விவசாயிகள் தவித்து வருகின்றனர். சித்தாமூர் அடுத்த கல்பட்டு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருகே உள்ள பனையடிவாக்கம் கிராமத்திலுள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து, கல்பட்டு கிராம விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களுக்கு, மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 25 நாட்களுக்கு முன், இந்த டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதடைந்தது. இந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் என, துணை மின்நிலைய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது, சம்பா பருவத்தில் நெல் விவசாயம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. ஆனால், மின் வினியோகம் தடைபட்டுள்ளதால், நாற்று பணிகளுக்கு தண்ணீரின்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பட்டம் தவறி விவசாயம் செய்தால், போதிய மகசூல் கிடைக்காது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே, மின்வாரியத் துறை அதிகாரிகள், பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.