உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு:செங்கையில் நம்மாழ்வார் விருதுக்கு, விவசாயிகள் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி அறிக்கை: உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்ட இதர உழவர்களுக்கும் நம்மாழ்வார் விருது வழங்கும் திட்டம், 2025 - 26ம் நிதியாண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. உயிர்ம வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்தது. உயிர்ம வேளாண்மையில் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளிப்பதன் மூலமாக, அதை பயிர்கள் எடுத்துக்கொள்கின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழுநேர உயிர்ம விவசாயியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதில், வெற்றிபெறும் மூன்று விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசால் தலா இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் சிறந்த உயிர்ம உழவருக்கான நம்மாழ்வார் விருது, தமிழக முதல்வரால் வழங்கப்படும். இந்த விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ்நெட்' வலைதளத்தில், செப்., 15ம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அம்பேத்கர் விருது இதுகுறித்து, கலெக்டர் சினேகா அறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், இந்த ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதை, வரும் 2026ம் ஆண்டின், திருவள்ளுவர் திருநாளன்று வழங்குவதற்காக, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்கள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், முதல் தளத்தில் உள்ள அறை எண் 108ல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும். தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள், வரும் 30ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை