மதுராந்தகம் ஏரியுடன் உயர்மட்ட கால்வாயை இணைக்க விவசாயிகள் வேண்டுகோள்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.அதன் பின், மின்சாரம் பாய்ந்து இறந்தவர் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், காட்டு பன்றிகளால் பயிர் சேதமடைந்த 6 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை, 85,000 ரூபாய், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றுத்துறையின் பசுமை பள்ளி திட்டத்திற்கு 35.88 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:மதுராந்தகம் ஏரியிலிந்து, 30 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், 40 ஆண்டுகளுக்கு முன், உயர் மட்ட கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஏரியுடன் இணைக்கப்படாமல் உள்ளது.இதை ஏரியுடன் இணைத்தால், 30 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால், ஏரியுடன் உயர்மட்ட கால்வாயை இணைக்க வேண்டும்.மாவட்டத்தில் முள்ளிப்பாக்கம், ராயல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் மதகுகளை சீரமைக்க வேண்டும்.தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, விவசாயிகளுக்கு 62 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை.இதை, வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். விவசாய நிலங்களில் உள்ள முட்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அருண்ராஜ் கலெக்டர் பேசியதாவது:மதுராந்தகம் ஏரியிலிருந்து உயர் மட்ட கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் செய்ததற்கு, விவசாயிகளுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழைக்கு முன், ஏரிகளில் மதகுகள் சீரமைப்பு, துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.