உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் மழையில் வீணாகி விவசாயிகள் வேதனை

கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் மழையில் வீணாகி விவசாயிகள் வேதனை

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் வட்டாரத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கமடைந்து உள்ளதால், மழையில் நனைந்து வீணாவதாக, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, மத்திய அரசின் கொள்முதல் நிலையங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் என, 150க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.இந்த நெல் மூட்டைகள், சிலாவட்டத்தில் உள்ள நவீன நெல் சேமிப்பு கிடங்கில், 15,000 டன் அளவிற்கு, பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டன.பின், சிலாவட்டம் மற்றும் அண்டவாக்கம் பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில், தலா 25,000 டன் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, தார்ப்பாய்களால் மூடி பாதுகாக்கப்பட்டு உள்ளன.அதேபோன்று, படாளம் சர்க்கரை ஆலையில் உள்ள கிடங்குகளில், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மத்திய அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு, விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாததால், கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அதன் காரணமாக, மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், இந்த நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைப்பதற்கு, சிலாவட்டம் மற்றும் அண்டவாக்கம் பகுதிகளில் போதிய இடவசதி இல்லை. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களிலேயே உள்ளன.தற்போது, சூறைக்காற்றுடன் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகின்றன.இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொட்டி வைத்து பாதுகாத்து வரும் விவசாயிகள், தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால், செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை