இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகள்...தவிப்பு: 3,000த்தில் 1,230 பேருக்கே கிடைத்ததால் அதிருப்தி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 10,000க்கும் மேற்பட்ட விவசாயிகளில், முன்னுரிமை அடிப்படையில், 3,000 பேருக்கு இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் பாதிக்கும் குறைவாக, 1,230 பேருக்கே இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில், கடந்த 1999ம் ஆண்டு முதல், விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், '2021- 22ம் ஆண்டில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து, மின் இணைப்பு வழங்கப்பட்டது.அதன் பின், 2022 - 23ல், '50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், 2022ம் ஆண்டு, கரூரில் துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுபாக்கம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதுார், திருமழிசை ஆகிய மின் கோட்டங்கள் உள்ளன.இந்த கோட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். கிணறு, ஆழ்த்துளை கிணறு வாயிலாக, நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர்.இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகா பகுதிகளில், அதிகமாக நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இதனால், இலவச மின் இணைப்பு கேட்டு, செங்கல்பட்டு மேற்பார்வையாளர் அலுவலகத்தில், விவசாயிகள் விண்ணப்பிக்கின்றனர். அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில், 10,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டங்களிலும், இலவச மின் இணைப்பு வழங்க கோரி, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, 2013 மார்ச் 31ம் தேதி வரை, இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 3,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டது.அதன்படி, 2022 - 23ம் ஆண்டு, 985 விவசாயிகளுக்கும், 2023- 24ம் ஆண்டு 125 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.அதன் பின், 2024 - 25ம் ஆண்டு, 299 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இதில் 120 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மற்ற விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்ட 3,000 பேரில், பாதிக்கும் குறைவாக 1,230 விவசாயிகளுக்கே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால், இணைப்பு கிடைக்காத விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, விரைந்து தங்களுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணியை, முன்னுரிமை அடிப்படையில் விரைவாக வழங்க வேண்டும். விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதிகளில் இலவச மின் இணைப்பு அதிகமாக வழங்க, அரசு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கே.மோகன்,அச்சிறுபாக்கம்.செங்ல்பட்டு மாவட்டத்தில், இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2024-25ம் ஆண்டு, 299 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கி, 120 பேருக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளோம். மற்றவர்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.- மின்வாரிய அதிகாரிகள்,செங்கல்பட்டு.
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு விபரம்
ஆண்டு விவசாயிகள்2022-23 9852023-24 1252024-25 299