உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அசுர வேக மண் லாரிகளால் அச்சம்

அசுர வேக மண் லாரிகளால் அச்சம்

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவிலில், அரசு பள்ளி செயல்படும் சாலையில் கனரக வாகனங்கள் அதிகவேகத்தில் செல்வதால், விபத்து அபாயம் நிலவுகிறது.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டங்கலம் கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, கடந்த 25ம் தேதி முதல், ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, 800க்கும் மேற்பட்ட,'டாரஸ்' லாரிகளில் மண் எடுக்கப்பட்டு சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், இந்த டாரஸ் லாரிகள் தார்ப்பாய் மூடாமல், வேகமாக செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி இந்த சாலையில் உள்ள நிலையில், வேகமாக செல்லும் லாரிகளால் மாணவ - மாணவியர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதனால், இச்சாலையில் பள்ளி நேரத்தில் லாரிகள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையை, 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையிலுள்ள சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 650க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்போர் இச்சாலையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். காலை முதல் 'டாரஸ்' லாரிகள் அதிக அளவில் இச்சாலையில் சென்று வருவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.மாணவர்கள் இச்சாலையில் செல்வதால், லாரிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும், லாரிகளால் புழுதி பறப்பதால் கண் எரிச்சல், சுவாச பிரச்னை ஏற்பட்டு, பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.இதனால், பள்ளி செல்லும் நேரத்தில் மண் லாரிகள் செல்ல தடை விதிக்கவும், மற்ற நேரங்களில் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ