கடலுார் மீன் இறங்கு தள கட்டடங்கள் இடியும் நிலையில் உள்ளதால் அச்சம்
கூவத்துார்; கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், சின்னக்குப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பம் ஆகிய மீனவ பகுதிகள் உள்ளன.இப்பகுதி மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் மீன்பிடி தொழில் மேம்பாடு கருதி, மீன்வளத்துறை, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், பெரியகுப்பத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில், மீன் இறங்குதளத்தை, 12 ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. மீனவர்கள் அளித்த இடத்தில், இத்தளம் அமைக்கப்பட்டது.முதல்கட்டமாக, மீன் ஏலம், வலைபின்னல் கூடங்கள், வலை பாதுகாப்பு கூடங்கள், வங்கி கட்டடம் ஆகியவை அமைக்கப்பட்டன.அதோடு, 2 கோடி ரூபாய் மதிப்பில், மீன் பதப்படுத்துதல், குளிர்பதன கிடங்குகள் ஆகியவையும் அமைக்கப்பட இருந்தன.இந்நிலையில், கடலரிப்பு காரணமாக, மீன் இறங்கு தள வளாகம் வரை கடல்நீர் புகுந்து, சுற்றுச்சுவர் கடலில் அடித்துச்செல்லப்பட்டது.கடலரிப்பு அதிகரித்து, கடல்நீர் புகுவது அதிகரித்து, இத்தளத்தில் உள்ள கட்டடங்கள் அலைகள் தாக்கி சேதமடைந்தன.அவற்றை பாதுகாக்கக் கருதி, கடந்த 2015ல், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 'கேபியான் பாக்ஸ்' எனப்படும் கம்பி வலையில் பாறை கற்கள் நிரப்பி, தடுப்பு அரண் அமைக்கப்பட்டது. நாளடைவில், இத்தடுப்பும் சீரழிந்தது.கட்டட சேதத்தை அறிந்தும், மீன்வளத்துறை, ஓடு வேய்ந்த கூரையை அகற்றி, கான்கிரீட் கூரை அமைத்து வரிப்பணத்தை வீணாக்கியது.கடலரிப்பை தடுக்க, 25 கோடி ரூபாய் மதிப்பில், கடலில் 'டைக்' எனப்படும் மணல் அணை, தற்போது நேர்கல் தடுப்பு உள்ளிட்டவை அமைத்தும், கடலரிப்பு நீடிக்கிறது.இந்நிலையில், மீன் இறங்குதள கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்து, இடிந்து விழும் அபாயத்துடன் உள்ளன. அங்கு, மீனவர்கள் செல்லவே அச்சப்படுகின்றனர்.படகுகள், வலைகள் வைக்க இடமின்றி தவிக்கின்றனர். தங்களுக்கு இடையூறாக உள்ள, முற்றிலும் சேதமடைந்த கட்டடங்களை இடித்து அகற்ற, முந்தைய கலெக்டர் ராகுல்நாத்திடம் முறையிட்டனர்.இருப்பினும், தற்போது வரை இடிக்கப்படவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை விரைந்து இடித்து அகற்ற வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.