மலேஷியா விமானத்தில் தீ?
சென்னை: மலேஷியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, தனியார் சரக்கு விமானம் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சென்னை வந்து தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியபோது 'ரன்வே'யில் விமானத்தின் டயர்கள் உராய்ந்து புகை எழும்பியது. இதுகுறித்து விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு பிரிவினர் விமானத்தை பரிசோதித்தனர். ஆனால் தீப்பிடிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. டயர்கள் உராய்ந்ததில் புகை எழும்பியது, உறுதி செய்யப்பட்டது. இது வழக்கமான ஒன்றாகும். அதே சமயம் சமூக வலைதளங்களில் சரக்கு விமானத்தில் தீ விபத்து என்பதுபோல செய்தி வெளியாகி வேகமாக பரவியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள, சென்னை விமான நிலைய அதிகாரிகள், இது போன்ற வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.