மேலும் செய்திகள்
இறைச்சி கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
10-Sep-2025
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான நந்திவரம் - கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், குடியிருப்புகளுக்கு நடுவே பட்டாசு கடைகள் அமைக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பகவதிபுரம், தர்காஸ் உள்ளிட்ட பகுதிகளில், பட்டாசு கடைகள் செயல்படுகின்றன. வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த கடைகள் விரிவுபடுத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக தொடர்ந்து பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப் படுகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள கிடங்குகள் மற்றும் கடைகள், இரும்பு தகரங்கள் கொண்டு அமைக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற வருவாய் துறை, தீயணைப்பு, காவல் துறை என, மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து, தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். இதற்கு, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வது வழக்கம். அப்போது, அவசரகால விபத்துகளில் வெளியேறும் வகையில் இருபுற வழிகள், புதுப்பிக்கப்பட்ட மின் விளக்குகள், மண் மூட்டைகள், தண்ணீர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. மேலும், உரிய உரிமம் இல்லாமல் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், வெடிமருந்து சட்டம் 1884ன் கீழ் தண்டனைக் குரிய குற்றம். ஆனால், ஆண்டுதோறும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் செயல்படும் பட்டாசு கடைகள், அதிகாரிகளை, 'சரிக்கட்டி' துவங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது, கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார், பகவதிபுரம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில், பட்டாசு கடை மற்றும் கிடங்குகள் திறக்கப்பட்டு உள்ளன. தீபாவளிக்கு அதிக சத்தம் மற்றும் அதிக காகிதத்துடன் வெடிக்கும் வகையிலான பட்டாசுகள் அதிகம் விற்கப்படுகின்றன. இந்த பட்டாசுகள், எந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என்ற விபரம் கூட இருப்பதில்லை. அதிகாரிகள் ஆய்வுசெய்ய வருவது கடை உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவதால், பட்டாசுகளை வேறு இடங்களில் மாற்றி வைக்கின்றனர் . எனவே, இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - நமது நிருபர் --
10-Sep-2025