உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முகத்துவாரத்தில் குவிந்துள்ள மணலை அகற்றாமல்...அலட்சியம்!: துார்வார கல்பாக்கம் பகுதி மீனவர்கள் வலியுறுத்தல்

முகத்துவாரத்தில் குவிந்துள்ள மணலை அகற்றாமல்...அலட்சியம்!: துார்வார கல்பாக்கம் பகுதி மீனவர்கள் வலியுறுத்தல்

மாமல்லபுரம்:கல்பாக்கம் அருகில், பாலாறு வங்கக் கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில், நீண்ட காலமாக மணல் குவிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. அலட்சியம் காட்டாமல், மீன்வளம் பெருக்கத்திற்கும், மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்கும், இப்பகுதியை துார்வாரி ஆழப்படுத்த வேண்டுமென, மீனவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கல்பாக்கம் அருகில் புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வாயலுார், கடலுார் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மீனவ பகுதிகளில், ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசிக்கின்றனர்.மீன்பிடி தொழில், இவர்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ளது. ஓராண்டில், ஒன்பது மாதங்களே மீன்பிடி தொழில் செய்கின்றனர். மீன்பிடி தடைக்காலம், வடகிழக்கு பருவமழை காலத்தில் மீன் பிடித்தல் குறைவது, புயல் ஆகிய காரணங்களால், மூன்று மாதங்கள் இத்தொழில் முடங்குகிறது.

பாதிப்பு

இது ஒருபுறமிருக்க, பல ஆண்டு கால கடலரிப்பு போன்ற பிரச்னைகளால் மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாக்க இயலாமல் பாதிக்கப்படுகின்றனர்.மேலும், கல்பாக்கம் அருகில், பாலாறு வங்கக் கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில், நீண்ட காலமாக மணல் குவிந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலும், பாதிப்பு ஏற்படுகிறது.இச்சூழலில், கடலில் மீன்வளம் பெருக்கம், மீன்பிடி தொழில் மேம்பாடு உள்ளிட்டவற்றை கருதி, வங்கக் கடலில் பாலாறு கலக்கும் முகத்துவார பகுதியில் அடைந்துள்ள மணலை அகற்றி ஆழப்படுத்தி, சிறிய மீன்பிடி துறைமுகமாக ஏற்படுத்த வேண்டுமென, மீனவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.கர்நாடக மாநிலத்தில் உருவாகும் பாலாறு, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியே கடந்து, கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் ஊராட்சி இடையே, வங்கக் கடலில் கலக்கிறது.பாலாற்றின் முகத்துவார பகுதி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மிகுந்த ஆழத்துடன், இயற்கை தன்மை சூழலுடன் இருந்தது. ஆற்றின் நன்னீர் கடலிலும், கடலின் உவர்ப்பு நீர் ஆற்றிலும் கலந்தது.முகத்துவாரத்தில் வெவ்வேறான நீரின் கலப்புத் தன்மை, மீன்களுக்கு ஏற்றதாக இருந்ததால், மீன்களும் திரண்டன. இனப்பெருக்கம் அதிகரித்து, மீன்வளம் பெருகியது.மீனவர்கள் கடலுக்குச் செல்ல இயலாத போது, ஆற்றில் மீன் பிடித்து வருவாய் ஈட்டினர்.

தடுப்பணை

கடந்த 2004ல், சுனாமி அலை தாக்கிய சூழலில், முகத்துவாரத்தில் மணல் குவிந்து மேடு ஏற்பட்டு, அப்பகுதி துார்ந்தது. நாளடைவில், ஆற்றில் கடல் நீர் ஊடுருவி, நிலத்தடி நீரும் மாசடைந்தது.கடலில் மழைநீர் கலந்து வீணாவதையும், ஆற்றில் கடல் நீர் ஊடுருவலையும் தடுக்க, கடந்த 2019ல், நீர் செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது.இந்த அணை அமைக்கப்பட்ட பின், கடல் நீர் ஆற்றில் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டுள்ளது. மழைநீர் அணையில் தேங்கி குடிநீர், விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. ஆனால், முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள மணல் அடைவு மட்டும் நிரந்தரமாக நீடிக்கிறது.இதனால், கடலில் ஆற்று நன்னீரும், ஆற்றில் உவர்ப்பு கடல் நீரும் கலக்க இயலாமல், 20 ஆண்டுகளாக தடை பட்டுள்ளது. மழைக்கால வெள்ளப்பெருக்கின் போது மட்டுமே, தடுப்பணை உபரி நீர் கடலில் கலக்கிறது.அப்போதைய பெருவெள்ளத்தால் ஆற்று நீரை கடல் உள்வாங்குவது சிக்கலாகி புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார் குடியிருப்பு பகுதிகளில் ஆற்று நீர் புகுந்து, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஆற்றின் முகத்துவாரத்தில் துார்வாரி ஆழப்படுத்தினால், மீண்டும் முந்தைய இயற்கைத் தன்மை ஏற்படும்.மீன்பிடி தொழிலுக்காக சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்தால், சதுரங்கப்பட்டினம் - பரமன்கேணி பகுதி மீனவர்கள் பயன் பெறலாம்.படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, கடலுக்குள் எளிதாக கொண்டு செல்லலாம் என, மீனவர்கள் கருதுகின்றனர். எனவே, அரசு அலட்சியம் காட்டாமல், பாலாறு வங்கக் கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில் குவிந்துள்ள மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தி வருகின்றனர்.ஆற்றின் முகத்துவாரம், முன்பு ஆழமாக இருந்தது. இப்போது மணல் குவிந்து துார்ந்துள்ளது. இப்பகுதியை இயந்திரம் வாயிலாக ஆழப்படுத்தி, முன்பிருந்த இயற்கை நிலையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், மீன்வளம் பெருகும். இங்குள்ள மீனவர்கள், சாதாரண விசைப் படகில் சென்றே மீன் பிடிக்கின்றனர். ஆழ்கடலில் மீன் பிடிக்க லாஞ்ச் படகு அவசியம். அதை வாங்கி தொழில் செய்ய ஆர்வம் இருந்தாலும், அதை நிறுத்த துறைமுகம் இல்லாததால் வாங்குவதில்லை. தொழில் வளர்ச்சியும் இல்லை. அரசு பாலாற்றின் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த வேண்டும்.-கே.ராமசாமி, 55, மீனவர், உய்யாலிகுப்பம், வாயலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ