சதுரங்கப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் மீனவர்கள் வரவேற்பு
சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் அமைக்கவுள்ளதாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளதை, மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் ஊராட்சிப் பகுதியில், சதுரங்கப்பட்டினம் வடக்கு, தெற்கு, மெய்யூர் ஆகிய மீனவர் பகுதிகள் உள்ளன. மீனவர்கள், வாழ்வாதாரத்திற்கு கடலில் மீன் பிடிக்கின்றனர். மெய்யூர் துவங்கி, கல்பாக்கம் நகரிய எல்லை வரை நீளமாக அமைந்துள்ள இப்பகுதி கடற்கரை, பல ஆண்டுகளாக கடலரிப்பு பாதிப்பு உள்ளது.மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க இயலவில்லை. மீன்பிடி தொழில் மேம்பாட்டு வசதிகள் இல்லை. இப்பகுதி கடலரிப்பை தடுத்து, மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக மீன் இறங்குதளம் அமைக்குமாறு, அரசிடம் மீனவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் இங்கு மீன்பிடி இறங்குதளம் அமைக்கவுள்ளதாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை மீனவர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்தனர்.