மீனவர் சேமிப்பு, நிவாரண திட்ட நிதி ரூ.8.38 கோடி செங்கையில் வழங்கல்
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், மீனவர் சேமிப்பு மற்றும் அரசு பங்களிப்பு நிவாரணமாக, தலா 4,500 ரூபாய் வீதம், மீனவ பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிக்குப்பம் முதல், இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, 36 பகுதிகளில் மீனவர்கள் வசிக்கின்றனர். கடலில் மீன்பிடித்து, வாழ்வாதாரம் ஈட்டுகின்றனர்.வங்கக் கடலில், ஆண்டுதோறும் அக்., - டிச., மாதங்களில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு, புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால், கடலில் மீன் பிடிக்க இயலாமல், மீன்பிடி தொழில் முடங்கி பாதிக்கப்படுகின்றனர்.அவர்கள் வாழ்வாதாரம் கருதி, தமிழக அரசு, 7,500க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும், தலா 6,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்குகிறது.இது ஒருபுறமிருக்க, மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த ஆண், பெண் உறுப்பினர்களிடம், மாத சேமிப்பு தொகையாக, ஒன்பது மாதங்களுக்கு தலா 1,500 ரூபாய் பெறுகிறது.வடகிழக்கு மழைக்காலத்தில், தமிழக அரசு தலா 3,000 ரூபாய் வீதம், பங்களிப்பு தொகை அளித்து, பயனாளிகளுக்கு, தலா 4,500 ரூபாய் அளிக்கிறது.சேமிப்பு நிவாரணமாக, ஆண்கள் 10,132 பேர் மற்றும் பெண்கள் 8,499 பேர் ஆகியோருக்கு, தலா 4,500 ரூபாய் என, 8.38 கோடி ரூபாய் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளதாக, மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.