பராமரிப்பு பணி பெயரில் அடிக்கடி மின் தடையால்... தவிப்பு:கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதிவாசிகள் அதிருப்தி
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதியில், மின் பராமரிப்பு பணிகள் எனக் கூறி, அடிக்கடி மின் தடை செய்யப்படுவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய இரு நகராட்சி பகுதிகளைச் சுற்றி, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இங்கு, கடந்த 60 நாட்களில், பராமரிப்பு பணிகளுக்காக நான்கு முறை, பகல் நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், நாளை மறுநாள் சனிக்கிழமை, பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் மின் தடை செய்யப்படும் என, அறிவிப்பு வெளியாகி உள்ளது.அடிக்கடி நடக்கும் மின் தடையால் பகுதிவாசிகள், வியாபாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தவிர மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தோரும், மின் தடையால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.'கே.வி., சுவிட்ச்'இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:மின் விநியோகத்தை பொறுத்தவரை, கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, மறைமலை நகர் கோட்டம் தலைமை இடமாக உள்ளது.மறைமலை நகர் கோட்டத்தில், அவசர கால பராமரிப்பு, மாதாந்திர பராமரிப்பு நடப்பதாகக் கூறி, மாதத்திற்கு இரு முறை இப்பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.கடந்த ஏப்., 19ம் தேதி கூடுவாஞ்சேரி உட்கோட்டத்தில் உள்ள 33 'கிலோ வாட்' துணை மின் நிலையத்தில், அவசர கால பராமரிப்பு எனக் கூறி, கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.பின், கடந்த ஏப்., 26ம் தேதி, மாம்பாக்கம் துணை மின் கோட்டத்தில், மாதாந்திர பராமரிப்பு மற்றும் புதிய 110 'கே.வி., சுவிட்ச்' பொருத்தும் பணி நடைபெற்றதை முன்னிட்டு வண்டலூார், மாம்பாக்கம் உட்பட 13 பகுதிகளில், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.கடந்த 15ம் தேதி, கூடுவாஞ்சேரி உபகோட்டத்தில் உள்ள 33/11 கே.வி., துணை மின் நிலையத்தில், அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாகக் கூறி நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார் உட்பட, 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.பெரும் இன்னல்கள்இந்நிலையில், நாளை மறுநாள் மறைமலை நகர் 110 கே.வி., துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாகவும், அதனால் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், ஆதனுார், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 32 பகுதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.பொதுவாக, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், மாதத்திற்கு இருமுறை பராமரிப்பு என்ற பெயரில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதால், பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.மறைமலை நகர், கூடுவாஞ்சேரி மற்றும் உட்புற கிராமங்களில், மின் நுகர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், மின் பகிர்மான மற்றும் மின் விநியோக கட்டுமானங்களை புதுப்பிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய துணை மின் நிலையங்களை நிறுவுதல், மின் மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட பல பணிகள், தற்போது பல இடங்களில் நடந்து வருகின்றன. அவற்றை மின் விநியோகத்துடன் ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பான மின் விநியோகத்திற்கான சோதனை, ஆய்விற்காகவும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் நிலைமை சீராகும்.- மின்வாரிய அதிகாரிதொழில் முனைவோர் அதிருப்திதொழில் முனைவோர் கூறியதாவது:மளிகை கடைகளில், ஒரு மணி நேரம் மின் தடை என்றாலே பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் கெட்டுப்போகும் வாய்ப்புண்டு.காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை ஏற்படும் போது அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து, இருப்பு வைக்க முடியாது. இதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுவர்.தையல் தொழில், இரும்பு பட்டறை உள்ளிட்ட சிறு தொழில் முனைவோர், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தே ஆக வேண்டும்.எனவே, பகல் நேரத்தில் மின் தடை ஏற்பட்டால், அன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.