சாலையோரத்தில் குப்பை குவிப்பு சிங்கபெருமாள்கோவிலில் சீர்கேடு
சிங்கபெருமாள் கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம், பகத்சிங் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு, தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.இங்கு உள்ள ஜி.எஸ்.டி., சாலை, மண்டபத் தெரு, திருக்கச்சூர் சாலை, குளக்கரை தெரு ஓரம், கிராம நிர்வாக அலுவலகம் எதிரே என, பல இடங்களில் திறந்தவெளியில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது.இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குப்பை அகற்றப்படுவது இல்லை. குப்பை கொட்டப்படும் இடங்களில், குப்பை தொட்டிகள் இல்லை.இதன் காரணமாக மாடுகள், நாய்கள் குப்பையை கிளறி, தெரு முழுதும் வீசிச் செல்கின்றன.அதே போல மழைநீர் கால்வாய்களில் தற்போது, கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக, நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, குப்பையை முறையாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.