கிளியாற்றில் குப்பை கொட்டி எரிப்பு
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, கருங்குழி பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு சென்று, மட்கும் குப்பை மற்றும் மட்கா குப்பை என, தனியாக பிரிக்கப்படுகிறது.ஆனால், சில மாதங்களாக, பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் சிலர், வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லாமல், மதுராந்தகம் ஏரிலிருந்து கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும் கிளியாற்றில் கொட்டி செல்கின்றனர்.இந்த குப்பை கழிவுகளை மர்ம நபர்கள், தீ வைத்து எரிகின்றனர். டன் கணக்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை எரிப்பதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.தேசிய நெடுஞ்சாலையோரம், குப்பையை கொட்டி எரிப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்வோர், புகையினால் மூச்சு திணரளுக்கு ஆளாகின்றனர்.கிளியாற்றில் கொட்டி எரிக்கப்படும் குப்பை கழிவுகளை முறையாக அகற்றவும், இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க, கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.