அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
செங்கல்பட்டு:அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, தடம் எண் 'டி6' அரசு பேருந்து, நேற்று முன்தினம் மாலை பழவேரி நோக்கிச் சென்றது. செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையில், வேண்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் பேருந்து சென்ற போது, அங்கிருந்த அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் சிலர், பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து பயணியர் கூறியதாவது: செங்கல்பட்டு தடத்தில் செல்லும் பேருந்துகளில், ஐ.டி.ஐ., மாணவர்கள் படியில் தொங்கியபடி, ஆபத்தான நிலையில் பயணிப்பது பல ஆண்டுகளாக தொடர்கிறது. மாணவர்கள் வேண்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து மீண்டும் தொங்கியபடி ஐ.டி.ஐ.,க்கு வருகின்றனர். இதனால் பெண் பயணியர், பள்ளி செல்லும் மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க, மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.