முருங்கை - அல்லுார் சாலை துண்டிப்பு கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது முருங்கை ஊராட்சி.முருங்கையில் இருந்து அல்லுார் வரை செல்லும் சாலை, 1.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டது.இந்த சாலை வழியாக நெடுங்கல், கரசங்கால், அல்லுார், வெளியம்பாக்கம் பகுதி மக்கள், ஒலக்கூர் வழியாக திண்டிவனம் சென்று வந்தனர்.சமீபத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை முழுதும் துண்டிக்கப்பட்டது. தற்போது, 15 நாட்களைக் கடந்த பின்னும், இதுவரை சாலையை சீரமைக்க ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும், சாலையின் ஓரம் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் ஒதுங்கி நிற்க முடியவில்லை. அப்படியே ஒதுங்கினால், பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.தற்போது, முருங்கை -- அல்லுார் இடையே முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மண் கொட்டி சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று மீண்டும் பாதிப்பு ஏற்படாதவாறு முறையாக சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.