ஜி.எஸ்.டி., சாலையில் 10 அடிக்கு ஒரு பள்ளம்; பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரை அபாயம்
கூடுவாஞ்சேரி : பெருங்களத்துார் முதல், செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், 10 அடிக்கு ஒரு பள்ளம் என்ற விகிதத்தில் தொடர்ந்து, சாலை முழுதும் அபாயகரமான பள்ளங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.ஜி.எஸ்.டி., சாலையில், பெருங்களத்துார் முதல், செங்கல்பட்டு வரையிலான பகுதியில் தொழிற்சாலைகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இச்சாலையில், 10 அடிக்கு ஒரு பள்ளம் என்ற விகிதத்தில், பல இடங்களில் அபாயகரமான பள்ளங்கள் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதால், சாலையை சீரமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதனால், இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், மரண பீதியுடன் செல்ல வேண்டியுள்ளது.இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதில் இருந்து, கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அதிக வாகனங்கள் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் வழியாக செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு சாலை மார்க்கமாக செல்கிறோம்.இந்த சாலையின் இருபுறமும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், 10 அடிக்கு ஒரு பள்ளம் என்ற முறையில், ஆங்காங்கே சாலையின் மையப் பகுதியிலும், சாலை ஓரத்திலும் அதிகமான பள்ளங்கள் உள்ளன. மேலும் சாலையின் ஓரத்திலும், அணுகு சாலை பகுதிகளில் மணல் திட்டுகள் ஆங்காங்கே உள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, அருகில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் மோதி, சாலையில் விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாலே, அன்றாடம் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தெரிய வரும். இந்த சாலை 2015ம் ஆண்டு வர்தா புயல் பாதிப்புக்கு பிறகு, இதுவரை சீரமைக்கப்படவில்லை.பள்ளங்களை சரி செய்ய வேண்டிய நெடுஞ்சாலை துறையினர், அலட்சியமாக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட, ஜி.எஸ்.டி., சாலையில் இருபுறமும் ஆங்காங்கே அதிகமான பள்ளங்கள் உள்ளன. சாலையை சீரமைக்க கோரி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கும் மனு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மனுவை பரிசீலனை செய்து, விரைவில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறோம்.-எம்.கே.டி.கார்த்திக்,தலைவர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி.