ஓ.எம்.ஆர்., சாலையில் கழிவுநீரை வெளியேற்றும் ஐ.டி., நிறுவனங்களால் சுகாதார சீர்கேடு
சோழிங்கநல்லுார்: ஓ.எம்.ஆரில் உள்ள கட்டடங்களில் சேரும் கழிவுநீரை சாலையில் வெளியேற்றுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தினமும் 1 கி.மீ., துாரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஓ.எம்.ஆரில், 200க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும், சுத்தி கரிப்பு நிலையம் வைத்து, அங்கு சேரும் கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டும் என, மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. பெரிய ஐ.டி., நிறுவனங்கள் முறையாக சுத்திகரிக்கின்றன. இவர்களுக்கு, வெளிநாட்டு 'புராஜக்ட்' கிடைக்க, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், கழிவுநீரை முறையாக கையாளும் 'கார்பன் கிரெடிட்' சான்று தேவை. இதனால், கழிவுநீரை முறையாக சுத்திகரித்து பயன்படுத்துகின்றனர். ஆனால், சிறிய ஐ.டி., நிறுவனங்கள், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் அதை பின்பற்றுவதில்லை. மாறாக, கழிவுநீரை மோட்டார் கொண்டு இறைத்து, ஓ.எம்.ஆரில் உள்ள வடிகால்வாய்களில் விடுகின்றனர். வடிகால்வாய் நிரம்பி, சாலையில் வடிந்தோடும் கழிவுநீர், பள்ளமான பகுதிகளில் நாள் கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால், ஓ.எம்.ஆரில் ஒரு கி.மீ., துாரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், துர்நாற்றம், தொற்று நோய் பாதிப்பு போன்ற சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இது குறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது: சில அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் வெளியேற்றும் கழிவுநீரில் நின்று, நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. வாகன ஓட்டிகள் எங்களை வசைபாடி செல்கின்றனர். கழிவுநீரை வடிகால்வாய், சாலையில் விடுவதை தடுக்க, நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். சாலை மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கழிவுநீரை வடிகால்வாய், சாலையில் விடக்கூடாது என, பலமுறை நோட்டீஸ் வழங்கியுள்ளோம். சிலர், அரசியல்வாதிகள் வழியாக நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கின்றனர். அதிக தொகை அபராதம் விதிக்க, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என்றனர்.