உதயம்பாக்கம் - படாளம் இடையே பாலாற்றில் உயர்மட்ட பாலம்... இழுத்தடிப்பு! தடுப்பணையுடன் பாலத்திற்கு திட்டமிட்டும் அரசு ஒப்புதல் தாமதம்
மாமல்லபுரம்: உதயம்பாக்கம் - படாளம் பாலாற்றில், தடுப்பணையுடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டத்திற்கு, அரசு நிர்வாக ஒப்புதல் வழங்காமல், நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பதாக, அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பொன்விளைந்தகளத்துார், உதயம்பாக்கம், ஆனுார் உள்ளிட்ட கிராமங்கள், பாலாற்றின் ஒருபுறம் உள்ளன. மறுபுறத்தில், மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட படாளம், பூதுார், அரசர்கோவில், புலிப்பரக்கோவில் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ஆற்றங்கரை பகுதியினர் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு, உதயம்பாக்கம் - படாளம் இடையே உள்ள பாலாற்றை கடந்தே செல்ல வேண்டும். கால விரயம் இப்பகுதியில், வடக்கு தெற்காக ஆறு கடந்து, உதயம்பாக்கம் வடக்குபுறம், படாளம் தென்புறம் என அமைந்துள்ளன. மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, படாளம் ஆற்றங்கரை பகுதியில் இயங்குகிறது. திருக்கழுக்குன்றம் பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்புகளை, சர்க்கரை அரவைக்காக படாளம் ஆலைக்கு, ஆற்றை கடந்தே கொண்டு செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஆற்றில் பாலம் இல்லாமல், செங்கல்பட்டு வழியே நீண்ட துாரம் சுற்றிக் கொண்டு, படாளத்திற்குச் சென்றனர். இதில், உதயம்பாக்கம் பகுதியினர், ஆற்றின் இடையே, 1 கி.மீ., துாரத்தைக் கடந்தால், படாளத்தை அடைய முடியும். ஆனால் பாலம் இல்லாததால், 20 கி.மீ., துாரம் சுற்றிச் சென்றனர். பொன்விளைந்தகளத்துார் பகுதியினரும், படாளம் வழியாக மதுராந்தகம் பகுதிக்கு எளிதாக செல்ல வேண்டிய நிலையில், செங்கல்பட்டு வழியாக, சுற்றியே சென்றனர். இந்த சிக்கலால் பண விரயம், கால விரயம் ஏற்பட்டது. எரிபொருளும் விரயமானது. எனவே, உதயம்பாக்கம் - படாளம் இடையே பாலம் கட்டுமாறு, இப்பகுதியினர் வலியுறுத்தினர். இதனால், படாளம் ஆலைக்கு கரும்பு வரத்து முக்கியத்துவம் கருதி வேளாண்மை துறை, கடந்த 1992ல் உதயம்பாக்கம் - படாளம் இடையே தரைப்பாலம் கட்டியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ந்தாலும், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சர்ச்சை இப்பாலம் சில மாதங்களிலேயே, வெள்ளப்பெருக்கில் முற்றிலும் இடிந்தது. ஒப்பந்தம் எடுத்த அரசியல் பிரமுகர், இந்த பாலத்தை உறுதியாக கட்டவில்லை என, சர்ச்சையும் ஏற்பட்டது. பாலம் உடைந்ததால், மீண்டும் இப்பகுதியினர், நீண்ட துாரம் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், புதிய பாலம் அமைக்குமாறு, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். படாளம் சர்க்கரை ஆலையை நிர்வகிக்கும் கூட்டுறவுத்துறை, தமிழக அரசிடம் பாலத்திற்காக நிதி கேட்டு வலியுறுத்தியும், கிடப்பில் போடப்பட்டது. இது ஒருபுறமிருக்க குடிநீர், விவசாய நீராதாரம் கருதி, இங்கு தடுப்பணை அமைக்கவும் வலியுறுத்தினர். கோரிக்கையை நீர்வளத்துறை பரிசீலித்து, கீழ்பாலாறு வடிநில கோட்ட நிர்வாகம், 270 கோடி ரூபாய் மதிப்பில், முழு நீள கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க முடிவெடுத்து, 2021ல் அரசிடமும் பரிந்துரைத்தது. இப்பகுதியில் உயர்மட்ட பாலமும் கட்ட வேண்டிய சூழல் கருதி, அரசு உயர்மட்ட பாலத்துடன் கூடிய தடுப்பணை அமைக்க முடிவெடுத்து, அதற்கேற்ப திட்டத்தை வடிவமைத்து மதிப்பிடுமாறு அறிவுறுத்தியது. முன்னுரிமை எனவே, 1,050 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் உயரம் என்ற அளவில், முழு நீள கதவணையுடன் தடுப்பணை, அதன் மேல், 7.5 மீட்டர் அகல பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. திட்டத்தின் மதிப்பீட்டை, 390 கோடி ரூபாய்க்கு உயர்த்தி அரசிடம் பரிந்துரைத்தும், இத்திட்டம் தாமதமாகிறது. திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், எம்.எல்.ஏ., விருப்ப முன்னுரிமை பணியாக, கடந்த ஆண்டு அரசிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, 410 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் பரிசீலனையில் உள்ளதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது. ஓராண்டு கடந்தும், அரசு நிர்வாக ஒப்புதல் அளிக்காமல், நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் சாலை, பாலம் வசதி இல்லாமல், பொதுமக்கள் சிரமப்பட்டதை ஏற்றுக் கொள்ளலாம். இன்றைய நவீன காலத்திலும், ஆதிகால மக்களை போன்றே அவதிப்படுகிறோம். உதயம்பாக்கம் - படாளம் உயர்மட்ட பாலம், கடலில் பாலாற்று நீர் வீணாகாமல் சேகரிக்க தடுப்பணை அமைக்க வேண்டும். - சிவ.செந்தமிழரசு, கடலுார் கிராமம். உதயம்பாக்கம் - படாளம் பாலாற்றில், கதவணையுடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக, திருத்திய மதிப்பீடாக 445 கோடி ரூபாய் மதிப்பிட்டு, அரசிடம் பரிந்துரைத்து உள்ளோம். நிர்வாக ஒப்புதல், நிதி ஒதுக்கீடு எதிர்பார்த்துள்ளோம். - பொதுப்பணித் துறையினர், கீழ்பாலாறு வடிநில கோட்டம்.