உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இறுதிக்கட்டத்தை எட்டிய உயர்மட்ட நடைபாலம் பணி

இறுதிக்கட்டத்தை எட்டிய உயர்மட்ட நடைபாலம் பணி

வண்டலுார், வண்டலுார் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை, ஜி.எஸ்.டி., சாலையை பாதசாரிகள் எளிதாக கடக்கும்படி, ஏழு இடங்களில், மின் துாக்கி வசதியுடன் கட்டப்படும் உயர்மட்ட நடை மேம்பால பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் முதல் சிங்கபெருமாள் கோவில் வரையிலான 18 கி.மீ., துாரத்தில், ஏழு இடங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.இந்த பேருந்து நிறுத்தங்களில், ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்கு செல்ல, சாலையின் நடுவே உள்ள மையத் தடுப்பு சுவரை பொதுமக்கள் கடக்க முடியாமல் சிரமப்பட்டனர்.தவிர, பொது மக்கள் கடந்து செல்லும் போது, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டது.இதனால், ஏழு இடங்களிலும், போலீஸ் பாதுகாப்புடன் மக்கள் சாலையை கடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்றாலும், பொது மக்கள், வாகன ஓட்டிகள் தொடர் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, குறிப்பிட்ட ஏழு இடங்களிலும், பொது மக்கள் சாலையை எளிதாக கடக்க, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், உயர்மட்ட நடை பாலம் அமைக்க, கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.அதன்படி வண்டலுார் இரணியம்மன் கோவில், வண்டலுார் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் டெக் பார்க், வள்ளியம்மாள் பொறியியல் கல்லுாரி, காட்டாங்கொளத்துார் சந்திப்பு, மறைமலை நகர் சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் ஆகிய ஏழு இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2024ல் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கூறியதாவது:இந்த ஏழு உயர்மட்ட பாலங்கள், 13.59 கோடி ரூபாய் செலவில், முழுதும் இரும்பால் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையின் இருபக்க இணைப்பிற்கு ஏற்ப, 150 அடி முதல் 157 அடி வரை பாலம் அமைக்கப்படுகிறது.இதன் உயரம், தரை மட்டத்திலிருந்து 18 அடி என்ற அளவில் அமைக்கப்படுவதால், கன்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இடையூறின்றி பயணிக்கும்.தவிர, அகலம் 10 அடி அளவில் உள்ளதால், பொது மக்கள் நெருக்கடியின்றி நடந்து செல்ல முடியும்.ஏழு பாலங்களிலும், படிக்கட்டுகள் தவிர மின் துாக்கி வசதியும் செய்யப்படுகிறது. இதனால் மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட அனைவரும் எளிதாக பாலத்தில் ஏறி, சாலையைக் கடக்க முடியும்.தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.இவ்வாறு தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை