செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பேரூராட்சி நிர்வாகங்களில், சாதாரண மின் விளக்குகளை, எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்றம் செய்ததில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சியான தி.மு.க., கவுன்சிலர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய இரு பேரூராட்சிகள்; செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், இடைக்கழிநாடு, அச்சிறுப்பாக்கம், கருங்குழி ஆகிய ஐந்து பேரூராட்சிகள் என, ஏழு பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கான்கிரீட் சாலைகள், சிமென்ட் கல் சாலை, குடிநீர் இணைப்புகள், மின் கம்பங்களில் தெருவிளக்குகள் உள்ளன. குடிநீர், சாலைகள், மழைநீர் கால்வாய் ஆகிய கட்டுமானப் பணிகளை சிறப்பு திட்டம், சட்டசபை, லோக்சபா ஆகிய தொகுதி மேம்பாடு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளின் மூலமாக செய்து வருகின்றனர். அனுமதி ஏற்கனவே, தெரு விளக்குகளுக்கு 4 அடி குழல் விளக்கு என அழைக்கப்படும் டியூப் லைட், சோடியம் ஆவி விளக்கு உள்ளிட்ட பல்வேறு விதமான விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2022ல், மாநில நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் மேற்கண்ட மின் விளக்குகளை எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்ற, நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக ஆணையரகம் அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் பேரூராட்சிகளில் உள்ள மின் விளக்குகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, 'டுபிட்கோ'விடம், 5.25 கோடி ரூபாய் கடனுதவி பெறப்பட்டது. இந்த நிதியில், பேரூராட்சிகளில் உள்ள 6,902 மின் கம்பங்களில், எல்.இ.டி., மின் விளக்குகளை பொருத்த வேண்டும். இதில், 4,000க்கும் குறைவாகவே எல்.இ.டி., விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. மீதம், 2,900க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தவில்லை. எனினும், 'மின் விளக்கு பொருத்துவதில் அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது; பணிகளில் முறைகேடு நடந்துள்ளது' என, ஆளும் தி.மு.க., கவுன்சிலர்கள், எதிர்கட்சியான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் குற்றஞ்சாட்டிஉள்ளனர். உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில், 1,268 மின் கம்பங்கள் உள்ளன. இதில், 75 லட்சம் ரூபாய் செலவில், 989 மின் விளக்குகள் எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்ற டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த நிறுவனம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சிண்டிகேட் அமைத்து, அனைத்து மின் கம்பங்களிலும் மின் விளக்கு பொருத்திவிட்டாக கணக்கு காட்டி, பல லகரங்களை வாரி சுருட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரைகுறை இருப்பினும், வாலாஜாபாத் பேரூராட்சியில், மராட்டிய கசாயக்கார தெரு, சரவண முதலி தெரு, செட்டித்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் குழல் விளக்கு தான் எரித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல, இடைக்கழிநாடு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளில் அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி -அ.தி.மு.க., கவுன்சிலர் வி.அரிகுமார் கூறியதாவது: பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது. ஒப்பந்த நிறுவனம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது இல்லை. அரைகுறையாக எல்.இ.டி., மின் விளக்குகள் மாற்றிவிட்டு, மொத்த விளக்குகளும் மாற்றப்பட்டதாக கணக்கை முடிக்கின்றனர். பல தெருக்களில் டியூப் லைட்டுகள்தான் எரிகின்றன. அதற்கு ஒதுக்கீடு செய்த நிதி எங்கே போனது. ஒரு பேரூராட்சியில் மட்டும் இப்படி என்றால், பிற பேரூராட்சிகளின் நிலை என்னவாக இருக்கும். எத்தனை கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கும். சவுகரியம் மேலும், மின் விளக்கு எரியவில்லை என, கவுன்சிலர்கள் புகார் அளித்தால், ஒப்பந்த நிறுவனத்திடம் கூறி சரி செய்து விடலாம் என, அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர். அந்த பிரச்னை சரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பொது மக்கள், அதிகாரிகளை தொடர்புக் கொள்வது போல, ஒப்பந்த நிறுவனத்தின் பராமரிப்பாளர்கள் பெயர்கள் வெளிப்படையாக தெரிந்தால், மக்களுக்கு சவுகரியமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினர். இதுகுறித்து, காஞ்சிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஒருவர் கூறியதாவது: சாதாரண மின் விளக்குகளை, எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்றும் பணி, நம் மாவட்டத்தில் நிறைவு பெற்றுள்ளது. ஒரு சில மின் கம்பங்களில் மின் விளக்கு எரியவில்லை என புகார் வருகிறது. இதுகுறித்து, ஒப்பந்த நிறுவனத்திடம் கூறி, மின் விளக்கு பராமரிப்பு பணி செய்ய பரிந்துரைக்கப்படும். தெருவிளக்கு பராமரிப்பை, 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நிறுவனம் எடுத்துள்ளதால், எளிதாக சரி செய்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.