உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை ஜோர்

 செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை ஜோர்

மறைமலை நகர்: செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிந்தாபுரத்தில் ஒன்று, அண்ணா சாலையில் மூன்று, பாவேந்தர் சாலையில் ஒன்று, ஜி.எஸ்.டி., சாலையில் ஒன்று என, இந்த பகுதியில் மொத்தம் ஆறு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகள் குடியிருப்புகள், கோவில் மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் வழி மற்றும் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளன. இதனால், தினமும் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது: மறைமலை நகர் அண்ணா சாலை மற்றும் பாவேந்தர் சாலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கும்,'குடிமகன்'கள், கூட்டமாக சாலை ஓரம் உள்ள நடைபாதை, நின்னக்கரை ஏரியின் நடைபாதை பூங்கா போன்ற இடங்களில் அமர்ந்து, திறந்தவெளியில் மது அருந்துகின்றனர். இந்த பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால், இந்த வழியாக செல்லவே அச்சமாக உள்ளது. மது போதையில் தன்னிலை மறந்து, ஆடைகள் விலகிய நிலையில் சாலையில் கிடக்கின்றனர். இதனால், பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். கோவில் மற்றும் பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த டாஸ்மாக் கடைகள் மாற்றப்படாமல், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்த பகுதியில், குடிமகன்களால் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. எனவே, காவல் துறை உயரதிகாரிகள் தலையிட்டு, கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீசாருக்கு தெரிந்தே மது விற்பனை

சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை வளாகத்தில், கள்ளச்சந்தையில் இரண்டு மடங்கு விலையில், மது விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு 'குவார்ட்டர்' மதுவை இரண்டாக பிரித்து, தலா 100 ரூபாய்க்கு விற்பதால், 'தின குடிமகன்'கள் காலையிலேயே இங்கு சென்று விடுகின்றனர். காலை 6:00 மணியிலிருந்தே மது விற்பனை சூடுபிடிக்கிறது. இதேபோல காட்டாங்கொளத்துார் திருப்பாணாழ்வார் தெரு, மகேந்திரா சிட்டி பேருந்து நிலையம் அருகே செட்டிபுண்ணியம் செல்லும் சாலையில் உள்ள அடுத்தடுத்த வீடுகளில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இலவச 'சைடு டிஷ்' உணவுடன், போலீசாருக்கு தெரிந்தே இந்த விற்பனை நடைபெற்று வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ