திருப்போரூர் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
திருப்போரூர்:தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக, அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில், சோதனை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் -- வண்டலுார் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் பாலிஹோஸ் எனும் தனியார் நிறுவனம் உள்ளது.நேற்று காலை 11:30 மணிக்கு, இந்நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, அங்கு சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய போலீசார், நிறுவன நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நிறுவனத்தில் உள்ள ஆவணங்கள், கணினிகளில் உள்ள தரவுகளை ஆய்வு செய்தனர். சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, இதுகுறித்த தகவல்கள் தெரியவரும்.இதேபோல், இந்த நிறுவனம் தொடர்புடைய இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.கடந்த வாரம், இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் மருத்துவ உபகரணம் தயாரிப்புக்காக, 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.அதேபோல், செங்கல்பட்டு நகர பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவர், வெற்றி ரியல் எஸ்டேட் என்ற பெயரில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலங்கள் வாங்கி, அதனை வீட்டு மனை பிரிவுகளாகவும், வீடுகள் கட்டியும் விற்பனை செய்து வருகிறார்.அந்நிறுவனத்தின் அலுவலகம், செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று வேலாயுதம் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரி துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை துணை கமிஷனர் கோவிந்தராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட குழுவினருடன் சோதனை நடந்தது.