வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் வரத்து அதிகரிப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 10,000க்கும் அதிகமான பறவைகள் வலசை வரத் துவங்கியுள்ளதால், சீசன் கலைக்கட்டியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்புக் கொண்டதாகும். தற்போது, ஏரியில் 11 அடிக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. வங்கதேசம், மியான்மார், இலங்கை, சைபிரியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து, தங்கி இனப்பெருக்கம் செய்து, மீண்டும் தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும். குறிப்பாக, நவம்பர் மாதத்தில் பறவைகள் வலசை வர துவங்கின. செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகள் வரத்து இன்று வெறிச்சோடி இருந்தது. ஆனால், தற்போது, நவம்பர் முதல் வாரத்தில், நத்தை கொத்திநாரை, செங்கல் நாரை, கூழைக்கடா, வக்கா, நீர் காகம், பாம்பு தாரா மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன், வெளிர் உடல் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 12க்கும் அதிகமான பறவை இனங்களைச் சேர்ந்த 10,000க்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. சரணாலயத்திற்கு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பறவை ஆர்வலர்கள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.