சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது அதிகரிப்பு போலீசார் சாட்டையை சுழற்றுவது அவசியம்
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்ட புறநகர் பகுதி கிராமங்களில், சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளதால், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை கட்டுப்படுத்த, காவல் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன. தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளதால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், இப்பகுதிகளில் குடியேறி வருகின்றனர். இந்த பகுதிகளில் சிறுவர் மற்றும் சிறுமியர் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 18 வயது நிரம்புவதற்கு முன்பே, வாகனங்களை இயக்க பெற்றோர் கற்றுக் கொடுக்கின்றனர். வாகனங்களை இயக்கும் போது ஏற்படும் ஆர்வத்தின் காரணமாகவும், வயது கோளாறு காரணமாகவும், சிறுவர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்கி, விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சிறுவர்கள் காயமடைந்து கை, கால் இழக்கின்றனர். சிலர், சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர். மேலும், இவர்கள் விபத்து ஏற்படுத்தும் போது, பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், 13 முதல்- 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் பலர், 'ஹெல்மெட்' அணியாமல், ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வரை ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சமீப காலமாக, புறநகர் பகுதிகளில் சிறார்கள் இருசக்கர வாகனங்களை வேகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் இயக்கி வருகின்றனர். சாலையில் போலீசார் இருப்பதை கண்டால், உடனடியாக திரும்பி சக வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கின்றனர். இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: ஓட்டுநர், பழகுநர் உரிமம் இல்லாமல் சிறார்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோர் மற்றும் பாதுகாவலரே பொறுப்பு. அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால், தங்களுக்கு ஏதும் தெரியாது எனக்கூறி தப்பிக்க முடியாது. உரிமம் இல்லாத சிறுவன் வாகனம் ஓட்டியதற்காக சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், வாகனத்தின் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், சிறார்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு, 12 மாதங்கள் பதிவெண் ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டிய சிறார் 25 வயது வரை, எந்த ஒரு ஓட்டுநர் உரிமமும் பெற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து, தற்போது சாலை விபத்துகள் இல்லாத நாட்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதில், சிறார்கள் வாகனங்களை ஓட்டுவது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.சுகுமாரன், சிங்கபெருமாள் கோவில்
சிறார் வாகனம் ஓட்டிய விபத்துகள்
கடந்த ஆண்டு அக்., மாதம் சிங்கபெருமாள் கோவிலில், இருசக்கர வாகனத்தில் தன் தாயுடன் ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்ற, 15 வயது சிறுவன் மீது, அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த மே மாதம், மறைமலை நகர் அருகே, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டாடா இண்டிகா கார் கவிழ்ந்தது. காரில் உடன் பயணித்த மற்றொரு சிறுவன் உயிரிழந்தார்.
மோட்டார் வாகன விதி
மோட்டார் வாகன விதிப்படி, இருசக்கர வாகனம் ஓட்ட, 18 வயது நிறைவடைய வேண்டும். அதற்கு முன்பாக வாகனத்தை ஓட்ட வேண்டுமென்றால், மோட்டார் வாகன உரிமம் பெற்ற பெற்றோர் மேற்பார்வையில், அவர்களது பெயரில் உள்ள 50 சி.சி., திறன் வரை கொண்ட வாகனத்தை மட்டுமே ஓட்டலாம். அதற்கும், சிறுவர்களுக்கு 16 வயது நிறைந்திருக்க வேண்டும். அதற்கு வயது சான்று, பள்ளியின் ஒப்பந்த சான்று, பெற்றோர் உரிமம், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை சமர்ப்பித்து உரிமம் பெற வேண்டும். இந்த நடைமுறைகள் பெரும்பாலான பெற்றோருக்கு தெரியாததால், சிக்கலில் சிக்குகின்றனர்.