செங்கையில் மொபைல்போன் பறிப்பு அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மெத்தனம்
மறைமலை நகர்:செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளான வண்டலுார், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள், தாம்பரம், ஒரகடம், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக, இதுபோன்று தங்கியுள்ளவர்களின் வீடுகள், விடுதிகளை குறி வைத்து, மர்ம நபர்கள் மொபைல் போன்களை திருடுவது அதிகரித்து உள்ளது. செயின் பறிப்பு இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்று அயர்ந்து துாங்கும் நேரத்தில் உள்ளே நுழையும் மர்ம நபர்கள் மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்பீக்கர், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்வது அதிகரித்து உள்ளது. அதேபோல, சாலையில் இரவு நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தியபடி நடந்து செல்வோரிடம், இருசக்கர வாகனத்தில் வேகமாக வரும் மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் மொபைல் போன், தங்க செயின் உள்ளிட்டவற்றை பறித்துச் செல்கின்றனர். கடந்த வாரம் கூட, சிங்கபெருமாள் கோவிலில் பெண்ணிடம், மர்ம நபர் இரண்டு சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியது குறிப்பிடத்தக்கது.போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, புறநகரில் போலீசார் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். அது போல, திருடப்பட்ட மொபைல் போன்களை, 'டிராக்' செய்து கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார்தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: சமீப காலமாக புறநகர் பகுதிகளில் மொபைல்போன் பறிப்பு, திருட்டு சம்பவங்களில், 17 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரியும் இவர்கள், போதை பொருட்கள் வாங்க மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகின்றனர். விற்பனை திருடும் மொபைல் போன்களை, சென்னை 'ரிச்சி' தெரு பகுதியில் உள்ள சில கடைகளிலும் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மொபைல் போன் பழுது நீக்கும் கடைகளிலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, பல டாஸ்மாக் கடைகளின் அருகே, திருட்டு மொபைல்போன்களை வாங்குவதற்காகவே ஆட்கள் உள்ளனர். திருட்டு மொபைல் போன்களை நேரடியாக பயன்படுத்தினால் போலீசார் கண்டுபிடித்து விடுவர் என்பதால், அதன் உதிரி பாகங்களை தனியாக பிரித்து விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. நெருங்கிய தொடர்பு அதன் காரணமாக 30,000 ரூபாய் மொபைல் போன்களை, 3,000 ரூபாய்க்கு கடைக்காரர்கள் வாங்குகின்றனர். அவற்றை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். புறநகர் பகுதிகளில் உள்ள மொபைல் போன்களை பழுது நீக்கும் கடைகளில் பலர், மொபைல்போன் திருடர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் இழுத்தடிப்பு மொபைல் போனை பறிகொடுத்தோர் கூறியதாவது: மொபைல்போன் பறிப்பு, திருட்டு குறித்து பெரும்பாலான காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. புகார் அளிக்க செல்லும் போது, நாள் கணக்கில் இழுத்தடிக்கின்றனர். திருடப்பட்டாலும், தொலைந்ததாகவே புகார் பெறுகின்றனர். வேலைக்காக இங்கு வந்து தங்கி உள்ளோம். புகார் கொடுக்க காவல் நிலையம் சென்று வருவதால், சரியாக வேலைக்கு செல்ல முடிவதில்லை. வேலை முடிந்து இரவு நேரங்களில், குறிப்பாக 10:00 மணி முதல் 4:00 மணி வரை தெருக்களில் நடந்து செல்லும் போது, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன அந்த நேரங்களில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.