மாமல்லபுரம்:தமிழகத்தில், ஹிந்து கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவற்றை, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. அத்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும் நிலம் உள்ளது.பல பகுதிகளில், இந்நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க, அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.நில மீட்பிற்கு, அந்தந்த பகுதி வருவாய்த் துறையினர் ஒத்துழைப்பு, காவல் துறையின் பாதுகாப்பு அவசியம். லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநில துறைகள் தயங்குவதாக கூறப்படுகிறது.உதாரணமாக, அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தை மீட்க, அரசு துறைகள் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலத்தை மீட்கக் கோரி, வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலத்தை மீட்டு அறிக்கை அளிக்குமாறு, அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.தனியார் பகுதிக்கான அணுகு பாதையாக ஆக்கிரமிக்கப்பட்டு அறக்கட்டளை நிலம் மீட்கப்பட்டது. பட்டிப்புலம், சூலேரிக்காடு, நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில், மீனவர் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை, எதிர்ப்பு காரணமாக மீட்க இயலவில்லை.வழக்கு தொடர்ந்தவர், மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்து, நிலுவையில் உள்ளது. அதன் விசாரணையை எதிர்நோக்கியுள்ள அறக்கட்டளை நிர்வாகம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, வருவாய்த் துறையிடம் வலியுறுத்தி வருகிறது.லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை தாமதித்து வருவதாக தெரிகிறது. நிரந்தர தீர்வு காண, சப் -- கலெக்டர் நாராயணசர்மா, நேற்று முன்தினம் சூலேரிக்காடு மீனவ பகுதியில், மீனவ வீடுகள் ஆக்கிரமிப்பு, வட்டார வளர்ச்சி நிர்வாகம், மேல்நிலை குடிநீர் தொட்டி ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.