குரோம்பேட்டை ஸ்டேஷன் சாலையில் நெரிசல் கடைகளை அகற்றி அகலப்படுத்த வலியுறுத்தல்
குரோம்பேட்டை:குரோம்பேட்டை ஸ்டேஷன் சாலையை, காந்தி நகர், ராதா நகர், பாரதி புரம், ஜமீன் ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர் பயன்படுத்துகின்றனர்.குரோம்பேட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணியரில், 50 சதவீதம் பேர், இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், ரயில் பயணியரின் வசதிக்காக, எம்.ஐ.டி., கல்லுாரி நிர்வாகம் வழங்கிய நிலத்தில், ஸ்டேஷன் சாலை அமைக்கப்பட்டது.அப்போது, சாலையோரம் 54 கடைகள் அமைக்கப்பட்டன. அந்த கடைகளை, அப்போது, நகராட்சியாக இருந்த பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் அங்கீகரித்து, அன்று முதல் வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்து வருகிறது.இந்த கடைகள் ஒவ்வொன்றும், ஐந்து அடி அகலம் கொண்டவை. தற்காலிக 'ஷீட்' வாயிலாக இருந்த கடைகளுக்கு, 2013ல் நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்காத நிலையில், கடைக்காரர்களே கான்கிரீட் தளம் அமைத்தனர். அப்போது, இது சர்ச்சையை ஏற்படுத்தியது.காலப்போக்கில், கடைகள் மெல்ல மெல்ல நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, சாலை 5 முதல் 6 அடியாக குறுகிவிட்டது. இதனால், 'பீக் அவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இச்சாலையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது, நெரிசல் மேலும் அதிகரிக்கும்.அதனால், ஸ்டேஷன் சாலையில் உள்ள கடைகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தி, மக்கள் நெரிசல் இன்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.கடந்த 2022, ஜூலை 4ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், ஸ்டேஷன் சாலையில் உள்ள கடைகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து, 2வது மண்டல குழு கூட்டத்திலும், இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மாநகராட்சி கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல்லாவரம் சிறுகடை வியாபாரிகள் சங்க செயலர் முனுசாமி கூறியதாவது:நான்கு தலைமுறைாக வியாபாரம் செய்து வருகிறோம். கடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறோம். ஒரு கடைக்கு, ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 1,350 ரூபாய் கட்டுகிறோம்.கடந்த 2021ல் உயர் நீதிமன்றம், கடை வாடகையை குறைக்க வலியுறுத்தி தீர்ப்பு வழங்கியும், அதை நிறைவேற்றவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.