அங்கன்வாடி கட்டுமான பணியில் தரமில்லை இரும்புலி கிராமத்தினர் குற்றச்சாட்டு
சித்தாமூர்:இரும்புலி ஊராட்சியில், தரமற்ற முறையில் அங்கன்வாடி மையம் கட்டப்படுவதாக குற்றஞ் சாட்டியுள்ள கிராம மக்கள், கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டு மென, வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த இரும்புலி ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட இரும்புலி கிராமத்தில் தற்காலிக கட்டடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். இங்கிருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால், இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து, 2025 - 26ல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 17.25 லட்சம் ரூபாயில், புதிய அங்கன்வாடி கட்டடம் அமைக்க 'டெண்டர்' விடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த கட்டடத்திற்கு, 'பீம்' எனும் வலுவான அடித்தளம் முறையாக அமைக்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக, கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால், கட்டடம் நாளடைவில் பழுதடைந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இரும்புலி ஊராட்சியில் நடைபெற்று வரும் அங்கன்வாடி கட்டுமான பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். தகவல் தெரியாது
ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சியில் நடக்கும் பணிகள் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் எந்தவித தகவலும் தெரிவிப்பது இல்லை. கட்டுமானப் பணிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து, விரைவில் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு, ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.