உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லையில் பூதத்தாழ்வார் திருத்தேரில் கோலாகல உலா

மாமல்லையில் பூதத்தாழ்வார் திருத்தேரில் கோலாகல உலா

மாமல்லபுரம்:முதலாழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர் பூதத்தாழ்வார். மாமல்லபுரத்தில் உள்ள நந்தவன குருக்கத்தி மலரில், ஐப்பசி மாத அவிட்டம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதியில் வீற்று அருள்பாலிக்கும் அவர், ஆண்டுதோறும் 10 நாட்கள் அவதார உற்சவம் காண்கிறார்.இந்த உற்சவம், கடந்த அக்., 31ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு, கோவிலில், தினசரி பிற்பகலில் திருமஞ்சனம் கண்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் மற்றும் திருப்பாவை சாற்றுமறை சேவையேற்று, மாலை மாடவீதிகளில் உலா சென்று, கோவிலை அடைந்து, இரவு திருவாய்மொழி சேவையேற்றார். நேற்று திருத்தேரில் உலா சென்றார்.கோவிலில், காலை 4:30 மணிக்கு, வழக்கமான பூஜையைத் தொடர்ந்து, 5:00 மணிக்கு ரதபிரதிஷ்டை ஹோமம் நடத்தி, 6:16 மணிக்கு பூத்தாழ்வார் திருத்தேரில் எழுந்தருளினார்.காலை 8:00 மணிக்கு, தேரில் வழிபாடு நடத்தியதைத் தொடர்ந்து, 8:25 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.மாடவீதிகளில் பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். 11:15 மணிக்கு தேர் நிலையை அடைந்தார். மாலை, நேற்று அவதார ஜெயந்தி உற்சவம் கண்ட பொய்கையாழ்வார், ஸ்தலசயன பெருமாள் ஆகியோருடன், பூதத்தாழ்வார் வீதிகளில் உலா சென்றார்.பூதத்தாழ்வார் அவதரித்த நாளான இன்று, காலை 6:00 மணிக்கு, திருமஞ்சனம் கண்டு, 8:30 மணிக்கு ரத்னாங்கி சேவையாற்றி, பிற சுவாமியர் அவருக்கு மங்களாசாசனம் செய்கின்றனர்.காலை 11:00 மணிக்கு, தொல்லியல் வளாக ஞானபிரான் சன்னிதியில் மங்களாசாசனம் நடந்து, வீதியுலா செல்கிறார். மாலை 4:00 மணிக்கு, அவதார ஸ்தலத்தில் எழுந்தருளி, திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை, இரவு 8:00 மணிக்கு ஸ்தலசயன பெருமாளுடன் வீதியுலா செல்கிறார். நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை