உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கூடுவாஞ்சேரி நகராட்சி ஆபீஸ் புதிய கட்டடம் 2 ஆண்டுகளாக பணிகள் இழுத்தடிப்பு

 கூடுவாஞ்சேரி நகராட்சி ஆபீஸ் புதிய கட்டடம் 2 ஆண்டுகளாக பணிகள் இழுத்தடிப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி 8.5 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. இங்கு, 30 வார்டுகளில் உள்ள 258 தெருக்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தவிர, புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அடுத்த 10 ஆண்டுகளில், நகரின் மக்கள் தொகை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜி.எஸ்.டி., சாலை அருகே கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாததால், புதிய அலுவலகம் கட்ட வேண்டுமென, 2021ல் கோரிக்கை எழுந்தது. மக்கள் கோரிக்கையை ஏற்று, புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு, 2022ல் 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், மந்த கதியில் கட்டுமான பணிகள் நடப்பதால், இரண்டரை ஆண்டுகளாகியும், இன்னும் பணிகள் முடியவில்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறம், வண்டலுார் தாலுகா அலுவலகம் அடுத்து, அரசுக்கு சொந்தமான 64 சென்ட் காலி நிலத்தில், 2,589 ச.மீ., பரப்புள்ள இடத்தில், புதிய அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள், 2023 ஜனவரியில் துவக்கப்பட்டன. இங்கு வாகன நிறுத்துமிடம், பொது மக்கள் ஓய்வறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், தலா 13,031 சதுர அடியில், தரை தளம் மற்றும் மேல்தளம் கட்டப் படுகிறது. பணிகள் துவக்கப்பட்ட போது, ஓராண்டிற்குள் பணிகள் முடிந்து, புதிய அலுவலக கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்பட்டது. ஆனால் , இரண்டரை ஆண்டுகள் முடிந்தும், இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. எனவே, நகராட்சி அலுவலக புதிய கட்டட பணிகளை விரைந்து முடித்து, நடப்பாண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ