அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே வஜ்ஜிராபுரம் கிராமத்தில் உள்ள தண்டுமாரியம்மன், வள்ளி, தேவசேனா, சுப்பிரமணி கோவிலில், அனைத்து பணிகளும் முடிவுற்று, மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.நேற்று முன்தினம், வேள்வி பூஜையுடன் துவங்கி, யாக சாலையில் கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி, விநாயகர் பூஜை உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் நடந்தன.நேற்று காலை 10 மணிக்கு, சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக சாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது.பின், வேத மந்திரங்கள் முழங்க, கோவில் மேல் கலசங்களுக்கும், உற்சவர் சிலைக்கும் புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதி கிராமவாசிகள், மஹா கும்பாபிஷேக விழாவில் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். திருப்போரூர்
திருப்போரூர் ஓம் சக்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, புனித நீர் கலசங்கள் மேள தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 10:00 மணிக்கு, ஓம்சக்தி விநாயகர் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.பின், மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.