அடிக்கடி பழுதாகும் மின் மோட்டார் மாமல்லையில் குடிநீர் பற்றாக்குறை
மாமல்லபுரம் : மாமல்லபுரம் பேரூராட்சி, அண்ணா நகரில், 9, 14ம் ஆகிய வார்டு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் 2,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியினருக்கு, ஐந்து ரதங்கள் சிற்பங்கள் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீரேற்றி, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை, தெருக் குழாய்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.வெண்புருஷம் பகுதி ஆழ்துளை கிணறுகளிலிருந்து, மூன்று மின் மோட்டார்கள், நீரேற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மோட்டாரை இரண்டு மணி நேரம் இயக்கி, அடுத்து மற்றொரு மோட்டார் என இயக்கப்படுகிறது.மோட்டார்கள் அடிக்கடி பழுதடைவதால், தொட்டியில் அரைகுறையாகவே நீர் நிரப்பப்படுகிறது. அதனால், தற்போது இரண்டு வாரத்திற்கும் மேலாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும், குடிநீர் பிரிவு ஊழியர்களை, சுற்றுலா வாகன கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுத்துவதால், அவர்கள் குடிநீர் வினியோக பணியை முறையாக மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், அண்ணா நகர் மட்டுமின்றி, பல பகுதிகளிலும் குடிநீர் வினியோகப் பணிகள் முடங்கியுள்ளன. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.