காரில் கடத்திய மதுபாட்டில்கள் பரனுார் அருகே பறிமுதல்
மறைமலைநகர்:புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக, செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பரனுார் சுங்கச்சாவடி ஜி.எஸ்.டி., சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக சென்னை நோக்கி வந்த, 'டொயோட்டா' காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 480 மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கார் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன்,42, என்பவரை கைது செய்தனர். பின் அவரை, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.