மதுராந்தகம் ராமதீர்த்த குளம் முழுமையாக நிரம்பியது
மதுராந்தகம்: மதுராந்தகம் ராமதீர்த்த குளம் முழுமையாக நிரம்பி உள்ளது. மதுராந்தகத்தில், புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான, 'ஏரி காத்த ராமர் கோவில்' என அழைக்கப்படும், கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், இக்கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில், உலகில் வேறெங்கும் காண முடியாத வகையில், மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைப்பற்றியவாறு, திருமணக்கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் அனைத்தும் முடிவு பெற்று, இரண்டு மாதங்களுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கும்பாபிஷேக பணிகளின் போது, கோவில் உட்பிரகாரத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் ராமதீர்த்த குளத்திற்கு வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, வடகிழக்கு பருவமழையில், கோவில் எதிரே உள்ள ராமதீர்த்த குளம், கடந்த சில ஆண்டுகளுக்குப் பின், தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது. அத்துடன், கோவில் கோபுரத்தின் நிழல் குளத்தில் விழும் ரம்மியமான காட்சியை, பக்தர்கள் கண்டு ரசித்துவிட்டுச் செல்கின்றனர். முழுமையாக நிரம்பியுள்ள, மதுராந்தகம் ராமதீர்த்த குளம்.