வரி செலுத்தினால் ஊக்கத்தொகை மறைமலைநகர் நகராட்சி அறிவிப்பு
மறைமலைநகர்:'சொத்து வரி செலுத்தினால், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்' என, மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில், 21 வார்டுகளில் குடியிப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இவர்கள் ஆண்டுதோறும், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரிகள் செலுத்தி வருகின்றனர்.இந்த வரிகள் வாயிலாக, நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2025 - 26ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை, வரும் 30ம் தேதிக்குள் செலுத்தி, நகராட்சியின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.அரையாண்டு தொடங்கிய நாளிலிருந்து முதல் அரையாண்டு ஏப்., 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை மற்றும் இரண்டாம் அரையாண்டு அக்., 1ம் தேதி முதல், 31ம் தேதி வரை, முப்பது நாட்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு, நிகர சொத்து வரியின் 5 சதவீதம்,அதிகபட்சம் 5,000 ரூபாய்க்கு உட்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும்.எனவே, நகரவாசிகள் தங்களது சொத்து வரித்தொகையை உரிய காலத்தில் செலுத்தி பயன் பெறலாம் என, நகராட்சி ஆணையர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, நகரின் முக்கிய பகுதிகளில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.