உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பல்லாங்குழியான பாலாறு பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பல்லாங்குழியான பாலாறு பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

மறைமலை நகர்: செங்கல்பட்டு பாலாறு மேம்பாலத்திலுள்ள சாலை கடுமையாக சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் -- இருங்குன்றம்பள்ளி இடையே, பாலாற்றில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தில் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த மேம்பாலத்தில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேம்பாலத்திலுள்ள சாலை சேதமடைந்து பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம், சென்னை மார்க்கத்தில் வேகமாக வந்த கார், மேம்பால சாலையிலுள்ள பெரிய பள்ளத்தில் இறங்கி, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி பழுதடைந்தது. இதனால், 40 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மேம்பாலத்தில் உள்ள 25 மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளதால், பாலத்தில் 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டு உள்ளது தெரியாமல், இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். விபத்தில் சிக்கிய வாகனங்களின் உடைந்த பாகங்கள் மற்றும் மணல் அதிக அளவில் குவிந்துள்ளதாலும், வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளங்களை சீரமைக்க வேண்டும். மின் விளக்குகளை பழுது நீக்கி, பாலத்தில் படிந்துள்ள மணலையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை