| ADDED : டிச 08, 2025 06:57 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே சிலாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை ஓரம் மண் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கின்றனர். சிலாவட்டத்தில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம், நவீன நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சிலாவட்டத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கல்குவாரி பகுதிகளில் இருந்து வெளியேறும் டிப்பர் லாரிகள், தேசிய நெடுஞ்சாலையை வந்தடையும். இதனால் அந்த பகுதியில், 100 மீட்டர் துாரத்திற்கு சாலையோரம் மண் குவிந்து உள்ளது. இதனால், அந்த இடத்தில் வாகனங்கள் செல்லும் போது, அதிக அளவில் புழுதி பறந்து, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்களில் படுவதால் தடுமாறுகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், இந்த இடத்தில் உள்ள மண்ணால் தடுமாறி சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். இதேபோல கீழே விழும் போது, கனரக வாகனங்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கல்குவாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மணலை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, அங்கு மண் குவியாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.