உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி -- நெல்லிக்குப்பம் சாலை சேதம் அபாய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பீதி

கூடுவாஞ்சேரி -- நெல்லிக்குப்பம் சாலை சேதம் அபாய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பீதி

கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம் வரையிலான, 11 கி.மீ., துார சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இதில், கூடுவாஞ்சேரி முதல் காயரம்பேடு வரையிலான 6.6 கி.மீ., சாலை, பல இடங்களில் பெயர்ந்து மேடு, பள்ளங்களுடன் உள்ளது.தவிர, சாலையின் அகலம் ஒரே அளவாக இல்லாமல், பல இடங்களில் குறுகலாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடனும், விபத்து அச்சத்துடனும் பயணிக்கின்றனர்.எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் துவங்கும் நெல்லிக்குப்பம் சாலை, பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, கல்வாய் வழியாக நெல்லிக்குப்பம் செல்கிறது.இதில், கூடுவாஞ்சேரி முதல் காயரம்பேடு வரையிலான 6.6 கி.மீ., துார சாலை, கடுமையாக சேதமடைந்து உள்ளது.இந்த வழித்தடத்தில், மூன்று இடங்களில் மட்டும், தலா 100 மீ., நீளத்திற்கு மையத் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் இல்லை.சாலையின் அகலம் சில இடங்களில் 60 அடி, சில இடங்களில் 40 அடி, சில இடங்களில் 25 அடி என விரிந்தும், குறுகியும் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளால் சீரான வேகத்தில் பயணிக்க முடியவில்லை.மேலும், 30க்கும் மேற்பட்ட இடத்தில் சாலையில் பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்கள் அருகே வரும் போது, வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.தவிர, 60 அடி அகலமுள்ள சாலையில் பயணித்து, திடீரென 25 அடி அகல சாலைக்குள் நுழையும் போது, எதிரெதிரே வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, நேருக்கு நேர் மோதி விபத்துகள் நடக்கின்றன.இந்த சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, சாலையின் பல இடங்களில் நீர் கசிந்து வெளியேறுகிறது.இதுவும் வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், கூடுவாஞ்சேரி முதல் காயரம்பேடு வரையிலான சாலையின் அகலத்தை முறைப்படுத்தி, 6.6 கி.மீ., துாரத்திற்கும் மையத் தடுப்பு அமைத்து, விபத்தில்லா வழித்தடமாக இந்த சாலையை புனரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை