உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்

முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்

சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, முக்கிய சாலை சந்திப்புகளில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் வாகனங்களும், இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலையில் ஆப்பூர், சேந்தமங்கலம், கொளத்துார் குப்பைக் கிடங்கு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், சாலையைக் கடக்கும் கடவுப் பாதை உள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் மீது மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில், 10க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்; பலர் படுகாயமடைந்து உள்ளனர். எனவே, நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, முக்கிய சாலை சந்திப்புகளில், இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ