இருள் சூழ்ந்த ஆதனுார் மேம்பாலம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்
ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து ஆதனுார் செல்லும் மேம்பாலத்தில், மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் அச்சத்துடன் பயணிப்பதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.ஊரப்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து மண்ணிவாக்கம், ஆதனுார் ஆகிய ஊராட்சிகளுக்கு எளிதாக செல்ல, 400 மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.கடந்த 2023ல், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின், இந்த பாலத்தில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக எரியவில்லை. இதனால், இரவு நேரத்தில் கும்மிருட்டாக காட்சியளிக்கும் பாலத்தில், அச்சத்துடன் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் எழுப்பி உள்ளனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் அச்சம் உள்ளதால், அதிகாரிகள் கவனித்து மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:மண்ணிவாக்கம், ஆதனுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் செல்லவும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரவும், இந்த பாலத்தையே பயன்படுத்த வேண்டி உள்ளது.இரவு நேரத்தில் பேருந்து முனையம் வரும் போதும், வெளியூர் சென்று வந்து, பேருந்து முனையத்தில் இறங்கி இரவு வீடு திரும்பும் போதும், கும்மிருட்டாக உள்ள பாலத்தில் பயணிக்க, ஒருவித அச்சம் ஏற்படுகிறது.தவிர, இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள், மாலை பணி முடித்து, இரவு 7:00 மணிக்கு மேல் வீடு திரும்பும் போது, பயத்துடனேயே பாலத்தை கடக்க வேண்டி உள்ளது.இரவில், பாலத்தின் மீது நடந்து வருபவர்களைக் கூட, அச்சத்துடன் பார்க்கும் சூழல் உள்ளது.எனவே, பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவில் எரியும்படி, சம்பந்தப்பட்ட துறையினர், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.